அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரப் பதவிகளில் உயர்ஜாதி, பார்ப்பனர் ஆதிக்கம் நிலவுவதாகக் கண்டித்து, மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் ஒத்த கருத்துடைய அமைப்புகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை வி.வி.டி. சிக்னல் அருகில் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மானமிகு மு. முனியசாமி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் மானமிகு இரா. ஆழ்வார் முன்னிலை வகித்தார். மதிமுக தூத்துக்குடி மாநகர செயலாளர் முருகபூபதி, மதிமுக மாநகர துணை செயலாளர் முருகேசன், மதிமுக மாவட்ட பிரதிநிதி தொம்மை, தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள், சமூக செயற்பாட்டாளர் அகமது இக்பால் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.


ஆர்ப்பாட்டத்தில், “உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை சட்டப்படி முழுமையாக வழங்குக”, “மண்டல் கமிஷன் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துக”, “ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுக”, “சமூகநீதிக்கான அதிகாரமிக்க ஆணையம் அமைக்குக” என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


“அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை”, “உயர் பதவிகளில் இடஒதுக்கீடு எங்கே?”, “சமூகநீதி நிலைநிறுத்த திராவிட மாடலைப் பின்பற்றுக” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், “வாழ்க தந்தை பெரியார்”, “வாழ்க அன்னை மணியம்மையார்”, “சமூகநீதிப் போராளிகள் வாழ்க” போன்ற முழக்கங்களும் ஒலித்தன.
நிகழ்ச்சியின் இறுதியில், மாநகர தலைவர் பெரியார் தாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.


இந்நிகழ்ச்சி மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. “போராடுவோம் வெற்றிபெறுவோம்! வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!” என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.