தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி 60 ஆண்டுகள் கல்விச்சேவையை நிறைவு செய்வதை முன்னிட்டு, பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து வைரவிழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளனர். இதனை ஒட்டி உருவாக்கப்பட்ட வைரவிழா சிறப்பு இலச்சினை (லோகோ) வெளியீட்டு நிகழ்ச்சி இன்று (01.03.2026) காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் அன்றோ ரூபன் தலைமை தாங்கி, வைரவிழா சிறப்பு இலச்சினையை வெளியிட்டார். தொடர்ந்து, வைரவிழா ஏற்பாடுகள் மற்றும் விழா நோக்கங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர் பே. இராஜேந்திரன் விளக்கமாக உரையாற்றினார். பள்ளியின் ஆசிரியரும் முன்னாள் மாணவருமான சூ. அந்தோணி ரவிகாந்த் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து வைரவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், வரும் மே மாதம் முதல் வாரத்தில் வைரவிழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும், விழாவை முன்னிட்டு ஏப்ரல் மாதம் முழுவதும் வாரந்தோறும் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களுக்காக கைப்பந்து, கபடி மற்றும் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் அப்துல் ஜபார் (பட்டிணமருதூர்), லாரன்ஸ், மதி, ஞானப்பிரகாசம், ரகுநாத், பாரத், ராஜ், கென்னடி, வெலிங்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் வைரவிழா கல்வி வளர்ச்சிக்கும், பழைய மாணவர் ஒற்றுமைக்கும் புதிய ஒளிவிளக்காக அமையும் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.