பொள்ளாச்சி வழக்கில் இன்று வழங்கிய தீர்ப்பை வரவேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவரது இல்லத்தில் வைத்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது :-

பொள்ளாச்சி வழக்கில் இன்று வழங்கி இருக்கக்கூடிய தீர்ப்பு நம்முடைய நீதியை நிலைநாட்டக் கூடிய தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்களின், குறிப்பாக புகார் அளிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். இந்த தீர்ப்பின் மூலம் குற்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு பயத்தை தரக்கூடிய ஒரு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல அந்த பெண்களினுடைய சாட்சியங்கள், போட்டோக்கள், அனைத்தும் வெளியில் தெரியாத வண்ணம் ரகசியம் காக்கப்பட்டுள்ளது. இதில் திரும்பிட செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள், சிபிஐ, நீதிபதிகள், அனைவருமே நாம் பாராட்ட வேண்டும். இதன் மூலம் மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே நமக்கோ, நமக்கு அருகில் இருப்பவருக்கோ, பாதிப்பு ஏற்படும்போது இந்த மாதிரியான குற்ற செயல்களில் ஈடுபடும் போது தைரியமாக நாம் புகார் அளிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது.

நம்முடைய முதலமைச்சர் தளபதியார் அவர்கள் எப்போதும் கூறுவார் கடந்த ஆட்சி காலத்தில் நடந்த இந்த ஒரு நிகழ்வு அதாவது பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று கூறுவார்கள். சென்ற ஆட்சியில் இந்த குற்ற செயல்கள் நடந்த போது பாதிக்கப்பட்ட பெண்களால் புகார் தரப்பட்ட போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியாளர்கள் எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை, ஆனால் எங்கள் தளபதியார் ஆட்சி பொறுப்பேற்ற போது தான் தளபதி யாரின் அறிவுறுத்தலின்படி எஃப்.ஐ.ஆர் போடுவதற்கு மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற உடனே சமூக நலத்துறை, காவல்துறையோடு இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறிப்பாக காலம் காலமாக இது போன்ற குற்றங்களை வெளியில் சொன்னால் பெண்களுக்கு அவமானம், நம் குடும்பத்திற்கு அவமானம், குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும் என்ற அடித்தட்டு மக்கள் புகார் தருவதற்கு கூட யாரும் முன்வரவில்லை தற்போது முதலமைச்சரின் நடவடிக்கையினால் காவல்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை, இணைந்து ஏற்படுத்தக் கூடிய விழிப்புணர்வினால் பெண்கள் புகார் தருவதற்கு முன் வருகின்றனர்.

புகார் தருவதினால் அவர்களின் ரகசியம் காக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பெண்களுக்கு இனி வரும் காலங்களில் நாம் தைரியத்தோடு புகார் தருவதற்கு முன்வர வேண்டும் என்று பெண்களுக்கு தன்னம்பிக்கை அளித்திருக்கிறது. என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.