தூத்துக்குடி மாவட்ட இ.எஸ்.ஐ (ESI) மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் நிவாரணமாக, தூத்துக்குடி வாஸன் கண் மருத்துவமனை இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையாக இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா தூத்துக்குடி வி.இ. ரோட்டில் அமைந்துள்ள வாஸன் கண் மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்றது.
விழா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாஸன் கண் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி (COO) டாக்டர் கமல்பாபு தலைமை வகித்து உரையாற்றினார். இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தரமான கண் மருத்துவ சேவைகளை எளிதாகப் பெற முடியும் என அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டின் குழும தலைவர் தங்கவேல் எம்.டி., SPIC நிறுவனத்தின் முதுநிலை மேலாளரும், தூத்துக்குடி HR Fortune நலச்சங்க உறுப்பினருமான இசக்கியப்பன், Gala Group of India நிறுவனத்தின் HR மற்றும் Compliance முதுநிலை மேலாளர் சுப்பிரமணியன், SPIC மற்றும் TFL மேலாளர் செந்தில்குமார், வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் துணைப் பொது மேலாளர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மேலும், வாஸன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியும் கண் மருத்துவ ஆலோசகரருமான டாக்டர் கனிமொழி MBBS., MS (Ophthalmology), டாக்டர் ரம்யா MBBS., DO., மற்றும் டாக்டர் வி.பி. சுகுமார் MBBS., MS (Ophthalmology) ஆகியோரின் முன்னிலையில், இ.எஸ்.ஐ பயனாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான கட்டணமில்லா கண் அறுவை சிகிச்சை மற்றும் இலவச கண் பரிசோதனை சேவைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது. இதில், இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் சிகிச்சை வசதிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாஸன் கண் மருத்துவமனை பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர். நிகழ்ச்சி உற்சாகமான சூழலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து இ.எஸ்.ஐ பயனாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறு வாஸன் கண் மருத்துவமனை நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளது.