தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள தகுதியான வாக்காளர்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தங்கள் வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வரைவு பட்டியலில் தகுதியுள்ள கணிசமான எண்ணிக்கையிலான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் தகுதியான வாக்காளர்கள் பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள், புதிய வாக்காளர்களாக பதிவு செய்ய படிவம்–6, வெளிநாடு வாழ் வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய படிவம்–6A, வாக்காளர்கள் தங்கள் விவரங்களை திருத்தம் செய்ய அல்லது புதுப்பிக்க படிவம்–8 ஆகியவற்றை நிரப்பி வழங்குவதன் மூலம் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம்.


மேலும், 2026 ஏப்ரல் மாதத்தில் 18 வயது பூர்த்தியாகும் புதிய வாக்காளர்களும் படிவம்–6-ல் விவரங்களை நிரப்பி வழங்கலாம். இதற்காக, 27.12.2025 (சனி), 28.12.2025 (ஞாயிறு), 03.01.2026 (சனி), 04.01.2026 (ஞாயிறு) ஆகிய நான்கு நாட்களில் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் அரசு ஊழியர்கள் தேவையான படிவங்களுடன் பணியில் இருப்பார்கள். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள தகுதியான வாக்காளர்கள், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள முகவரி மற்றும் வயதுக்கான உரிய ஆவணங்களுடன் அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்கு சென்று, புதிய பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் அல்லது விவர திருத்தம் ஆகியவற்றுக்கான படிவங்களை பெற்று அங்கேயே நிரப்பி வழங்கலாம்.


இவ்வாறு உரிய படிவங்களை நிரப்பி வழங்கினால் மட்டுமே, அவர்களின் பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். எனவே, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள தகுதியான வாக்காளர்களும், புதிய வாக்காளர்களும் விழிப்புணர்வுடன் இருந்து நடைபெற உள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தங்கள் வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.