கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுடன் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடற்கரை சாலையில் அமைந்துள்ள பனிமயமாதா ஆலயம் முன்பிருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த சிறுவனுடன் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, வட்டச் செயலாளர் டென்சிங், முன்னாள் தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், மணி அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கிறிஸ்து பிறப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விதமாக, பிரேசில், கனடா, மெக்சிகோ, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நினைவூட்டும் வகையில், அலங்கார ஊர்திகளில் பல்வேறு வடிவங்களில் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதிரடி இசை முழக்கத்துடன் இளைஞர்கள் உற்சாக நடனமாடியபடி ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளில் சென்று பொதுமக்களை கவர்ந்தனர்.


லயன் ஸ்டவுன், மரக்குடி, மட்டக்கடை, பாத்திமாநகர், திரேஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற அலங்கார ஊர்திகள், வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தபடி நகரம் முழுவதும் ஊர்வலமாகச் சென்றன. கப்பல் வடிவம், கிறிஸ்துமஸ் தாத்தா உள்ளிட்ட கண்களை கவரும் அலங்காரங்களுடன், இன்னிசை முழங்க இளைஞர்கள் ஆட்டம் பாடலுடன் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்தை கொண்டாடினர்.


இந்த வாகன அணிவகுப்பு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பனிமயமாதா பேராலயத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தை நகரின் பல்வேறு பகுதிகளில் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.


ஊர்வலத்தை முன்னிட்டு, எஸ்பி பொறுப்பு சிலம்பரசன், டவுன் ஏஎஸ்பி மதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியும் சகோதரத்துவமும் நிறைந்த இந்த கேரல் ஊர்வலம், தூத்துக்குடி மாநகரை திருவிழாக் கோலத்தில் மிளிரச் செய்தது.