தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ–மாணவிகளின் கல்வித் தரத்தையும் தொழில்நுட்ப அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் “உலகம் உங்கள் கையில்” மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ், விளாத்திகுளம் தொகுதியில் உள்ள மூன்று அரசு கல்வி நிறுவனங்களில் ஒரே நாளில் சிறப்பான விழாக்கள் நடைபெற்றன.
விளாத்திகுளம் வட்டம், நாகலாபுரம் உமறுப்புலவர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு நடைபெற்ற விழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். கல்வியுடன் தொழில்நுட்பம் இணையும் போது மாணவர்கள் உலகளாவிய போட்டிகளை எதிர்கொள்ளும் திறன் பெறுவார்கள் என அவர் தனது உரையில் தெரிவித்தார்.
அதேபோன்று, நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் இராமலிங்கம் கலந்து கொண்டு, மாணவர்களின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளுக்கு இத்திட்டம் பெரும் துணையாக இருக்கும் என கூறினார்.
மேலும், எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் பேபி லதா, எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவிகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன், மத்திய ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் ஏராளமான மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
“உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மடிக்கணினிகள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கிடையிலான டிஜிட்டல் இடைவெளியை குறைப்பதுடன், அவர்களின் கல்வி பயணத்தில் புதிய வாய்ப்புகளையும் உயர்ந்த இலக்குகளையும் உருவாக்கும் முக்கியமான முயற்சியாக அமைந்துள்ளது.