தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தை ஒட்டிய பட்டினமருதூர், பனையூர் பகுதிகளில் பண்டைய நாகரிகம் மற்றும் கடல் சார் வரலாற்றை வெளிப்படுத்தும் அரிய தொல்லியல் மற்றும் புவியியல் ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இப்பகுதிகளில் பழமை வாய்ந்த செவ்வக வடிவ கிணறு, முதுமக்கள் தாழி, பழமையான ஓடுகள், எழுத்துக்கள், பண்டைய இரும்புப் பொருட்கள், நாணயங்கள் உள்ளிட்டவை முன்பே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பட்டினமருதூர் பகுதி தமிழக அரசால் தொல்லியல் தளமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து, பட்டினமருதூர் மற்றும் பனையூர் பகுதிகளில் நிலத்தடி மற்றும் நீர்ப்பரப்பின் அடியில் புதையல்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, தூத்துக்குடியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் க. இளம் பகவத்திற்கு கடிதம் எழுதி, இந்திய விலங்கியல் மற்றும் புவியியல் ஆய்வு மையங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


அதன் பேரில் மாவட்ட ஆட்சியர், கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் மற்றும் புவியியல் ஆய்வு மையங்களுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். இதன் தொடர்ச்சியாக, பனையூர் பகுதியில் கடல் சார் புதைபடிமங்கள் மற்றும் படிவப் பாறைகள் குறித்த முதல் கட்ட கள ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்த ஆய்வில் மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள் தேபா ஸ்ரீ, சந்திரன், தோலா ராய் ஆகியோர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை தலைவர் சுதாகர் உள்ளிட்டோரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது சிறிய சிறிய சிப்பிகள், பல்வேறு வகையான கடல் சிப்பிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள் கூறியதாவது, “சுமார் 2 கிலோமீட்டர் தூரம் ஆய்வு மேற்கொண்டோம். இப்பகுதி சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்திருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கடல் சிப்பிகள், பலதரப்பட்ட முத்து சிப்பிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.


கடலிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இவ்வாறு கடல் சார் படிமங்கள் கிடைப்பது ஆச்சரியமானது. இது பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான இடம். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இதனை அழிவிலிருந்து காக்க வேண்டும். முழுமையான ஆய்வு மேற்கொண்டால், கடலுக்குள்ளும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை ஏற்படும். அப்போது பல வரலாற்று உண்மைகள் வெளிவரும்” என்றனர்.


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சுதாகர் கூறுகையில், “இதே போன்ற பாறை வடிவங்கள் பட்டினம், பட்டினமருதூர், மணப்பாடு பகுதிகளிலும் காணப்படுகின்றன. இந்த பகுதி அரசால் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான வரலாற்றுச் சின்னம்” என்றார்.


இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி கூறும்போது,
“கடலில் மட்டுமே காணப்படும் சிப்பிகள் இங்கு கிடைத்துள்ளன. குறிப்பாக முத்துச் சிப்பிகள் கடல் பகுதியிலிருந்து தானாக வெளியே நகர முடியாது. இருப்பினும் இங்கு அவை கிடைத்துள்ளது முக்கியமான ஆதாரம். கடல் பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.


இது ஆய்வுக்கு கூடுதல் பலமாக உள்ளது. காணாமல் போன குமரிக்கண்டம், பாண்டியர்களின் இருண்ட கால வரலாறு போன்றவற்றுக்கு விடை கிடைக்குமா என்ற அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.


பனையூர் – பட்டினமருதூர் பகுதிகளில் நடைபெறும் இந்த ஆய்வுகள், தமிழகத்தின் தொன்மையான வரலாறும், கடல் நாகரிகமும் மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் வாய்ப்பை உருவாக்கி வருவது வரலாற்று ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.