தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மங்களகிரி செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.


இந்த முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், பரிசோதனைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், ஆயூஷ் துறை சார்பில் மூலிகை செடிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் யாழினி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணஜோதி, சிறப்பு மருத்துவர்கள், தூத்துக்குடி திமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், தெற்கு மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு, கிளைச் செயலாளர்கள் வேலாயுதம், சீனிவாசகம், சேராந்தையன் உள்ளிட்டோர் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.


முகாமின் போது, விழா மேடையில் நின்றபடி கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது, மேடையில் ஏறி வருவதில் கர்ப்பிணி பெண்கள் சிரமப்படுவதை கவனித்த சட்டமன்ற உறுப்பினர், ஒரு கணம் கூட யோசிக்காமல் “நீங்கள் கீழேயே நின்று கொள்ளுங்கள், சிரமப்பட வேண்டாம்; நான் இறங்கி வருகிறேன்” என்று கூறி, மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து கர்ப்பிணி பெண்களுக்கு நேரில் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.


இந்த எதிர்பாராத மனிதநேய செயலால் கர்ப்பிணி தாய்மார்கள் நெகிழ்ச்சி அடைந்ததுடன், “இது தாய்மையை புரிந்த ஒரு தந்தை மனம்” என கூறி மனமார பாராட்டினர்.


நிகழ்ச்சியை மனிதநேயத்தின் அடையாளமாக மாற்றிய இந்த நெகிழ்ச்சி சம்பவம், முகாமில் கலந்து கொண்ட அனைவரின் மனங்களிலும் நீண்ட நேரம் தாக்கத்தை ஏற்படுத்தி, “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் உண்மையான நோக்கத்தை உணர்த்தியதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.