தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் திரு. இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தப்பட்ட பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு, தொழில் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 437 மனுக்கள் பெறப்பட்டன.


பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைவாக பரிசீலித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தினார். இதற்கு முன்பாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 96 மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் பிரச்சினைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேசிய அறக்கட்டளை மூலம் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்காக பாதுகாவலராக நியமிக்கப்பட்ட 5 நபர்களுக்கு, ஒரு வருட காலத்திற்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.4,720/- மதிப்பிலான இலவச தேய்ப்புப் பெட்டிகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம் மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.36,835/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு. செந்தில்வேல் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திரு. உலகநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி. சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு. பிரம்மநாயகம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, தீர்வு காணும் நோக்கில் நடைபெற்ற இம்மக்கள் குறைதீர் நாள் கூட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.