தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நிறைவடைந்து திங்கட்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவ–மாணவிகளின் கல்வி தேவைகளை கருத்தில் கொண்டு சமூக ஆர்வலர்கள் பலரும் உதவிக் கரம் நீட்டிவருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி கணேசன் நகரில் உள்ள சின்ன மணி பள்ளியில் பயிலும் 143 பள்ளி மாணவ–மாணவிகளுக்கு, அதிமுக வர்த்தக அணி செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான செல்லபாண்டியன், தனது சொந்த செலவில் ஸ்கூல் பேக், நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
பள்ளி தொடங்கிய இரண்டாவது நாளிலேயே புதிய ஸ்கூல் பேக் மற்றும் கல்விப் பொருட்களை பெற்ற மாணவர்கள், மிகுந்த மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தில் காணப்பட்டனர். இந்த உதவி கல்வியில் தொடர்ந்து முன்னேற மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், அதிமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்தானம், முன்னாள் மீனவர் கூட்டுறவு சொசைட்டி தலைவர் அகஸ்டின், சங்கர், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியனின் கல்வி சேவையை பாராட்டினர்.
பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியனின் இந்த முயற்சி, மாணவ மாணவிகளிடையே புதிய நம்பிக்கையையும், கல்வி மீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.