தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு DAWN – போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் நலவாழ்வு : போதைமருந்து இல்லா இந்தியாவை நோக்கி வழிநடத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி 06.01.2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலை 9.00 மணி முதல் 9.45 மணி வரை போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போதைமருந்து எதிர்ப்பு வாசகங்களை ஏந்தி உற்சாகமாக பேரணியில் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருமதி எம். ரேவதி, தமிழாசிரியர் (BT Assistant) அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் தொடங்கி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடர்ந்தது. வரவேற்புரையை வி.வி.டி. நினைவு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி எஸ். கனக ரத்தினமணி, எம்.ஏ., பி.எட்., அவர்கள் நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் திரு. பி. ஜேம்ஸ் அதிசயராஜா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் குழு வழக்கறிஞர் திரு. ஆர். சங்கரநாராயணன், பள்ளி செயலாளர் திரு. டி. பிரேமாநந்தம், செயலாளரின் தனி உதவியாளர் திரு. ஏ. சாஹுல் ஹமீத், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி திருமதி ஏ.வி. சுபாஷிணி, காவல் கண்காணிப்பாளர் திரு. என். சிலம்பரசன், ஐ.பி.எஸ்., ஆகியோர் சிறப்பு உரையாற்றி, இளைஞர்கள் போதைப்பொருள்களிலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேர்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றிய முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர் திருமதி ஆர். வசந்தி, எம்.எல்., அவர்கள், போதைமருந்து இல்லா சமூகத்தை உருவாக்க இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது என வலியுறுத்தினார்.
நன்றியுரையை உடற்கல்வி ஆசிரியரும் என்.சி.சி. பொறுப்பாளருமான திரு. எம். ஜீசஸ் ஆல்பன், எம்.ஏ., எம்.பி.எட்., எம்.பில்., அவர்கள் வழங்கினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.