தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியாளர் அலுவலகத்தில், 5.1.2026 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மதுரா கோட்ஸ் அரசு நிலம் மீட்பு குழு சார்பில் நடைபெற்ற விசாரணையில், மதுரா கோட்ஸ் ஆலை அமைந்துள்ள இடம் அரசு நிலம் என்பதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.


இதற்கு முன்னதாக, கடந்த 22.12.2025 அன்று மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் வழங்கப்பட்ட மனுவின் அடிப்படையில் இவ்விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு குழுவைச் சேர்ந்த தோழர்கள் அனைவரும் நேரில் ஆஜராகி, மதுரா கோட்ஸ் அரசு நிலம் என்பதற்கான தங்களது தரப்பு நியாயங்களை விளக்கியும், சம்பந்தப்பட்ட ஆவணங்களை மாவட்ட சார் ஆட்சியாளர் அவர்களிடம் மனுவாக அளித்தனர்.


இந்நிலையில், 5.1.2026 திங்கட்கிழமை அன்று முறையற்ற விதத்தில் தனியார் நிறுவனம் மதுரா கோட்ஸ் ஆலையை அத்துமீறி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து, அந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என மாவட்ட சார் ஆட்சியாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, மாவட்ட சார் ஆட்சியாளர் அவர்கள் தூத்துக்குடி வட்டாட்சியாளர் அவர்களை தோழர்கள் முன்னிலையில் கைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரணை நடத்தினார். விசாரணை நடைபெற்று வரும் காலம் வரை, மதுரா கோட்ஸ் ஆலையை அப்புறப்படுத்தக் கூடாது என தடை விதிப்பதாக அறிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரித்து, அந்த இடம் அரசு நிலம் என உறுதி செய்யப்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


இந்த விசாரணை மற்றும் கலந்துரையாடலில் பல்வேறு ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், மதுரா கோட்ஸ் அரசு நிலம் மீட்பு குழுவினரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை மாவட்ட சார் ஆட்சியாளரிடம் பதிவு செய்தனர்.


கலந்து கொண்டவர்கள் :


மா. மாரி செல்வம் – தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர், புரட்சி பாரதம் கட்சி, கிருஷ்ணமூர்த்தி – ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு, தோழர் சா.மு. காந்தி – மாநில தலைவர், தமிழ்நாடு மக்கள் நல இயக்கம், வழக்குரைஞர் சிலுவை – தலைவர், தமிழ்நாடு சான்றோர் வழக்கறிஞர் பேரவை, மின்னல் அம்ஜத் – ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்ட தொழிற்சங்க தலைவர், தாளமுத்து செல்வா – மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரம் கழகம், டாக்டர் அ. கோல்டன் பரதர் நிறுவனர் தலைவர், தமிழக மீனவ மக்கள் கட்சி