தூத்துக்குடி மாவட்டத்தின் மானாவாரி விவசாய மண்ணில் உருவான விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, நீண்ட காலமாக “அதிமுக எஃகு கோட்டை” என அழைக்கப்பட்டு வந்தது. மிளகாய் வத்தல், கம்பு, மக்காச்சோளம், பருத்தி சாகுபடிகளும், வேம்பார் முதல் தருவைகுளம் வரை பரந்து விரிந்த கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடி, உப்பள தொழில்களும் இந்த தொகுதியின் அடையாளமாக உள்ளன.
மகாகவி பாரதியார், உமறுப்புலவர், முத்துச்சாமி தீட்சிதர் போன்ற பெருமக்களை பெற்ற இந்த வரலாற்று மண்ணில், 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஒரு அரசியல் மாற்றத்தை எழுதினர். அதிமுக எஃகு கோட்டையாக கருதப்பட்ட விளாத்திகுளம், திமுக வேட்பாளர் மார்க்கண்டேயனை சட்டமன்றத்துக்கு அனுப்பி, மக்கள் நல அரசியலுக்கு புதிய அத்தியாயம் தொடங்கியது.
திமுக ஆட்சிக்குப் பிறகு விவசாயம், குடிநீர், சாலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அரசு நலத்திட்டங்கள் அடித்தள மக்களிடம் சென்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். வளர்ச்சி மற்றும் நிர்வாகம் இரண்டும் இணைந்த அரசியலே இன்று விளாத்திகுளத்தின் புதிய அடையாளமாக மாறி வருகிறது.
ஒருகாலத்தில் அதிமுக “எஃகு கோட்டை” என சொல்லப்பட்ட தொகுதி, இன்று மக்கள் கோட்டையாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் முகமாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் திகழ்கிறார் என்பதே தொகுதி மக்களின் பார்வை.