தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பல இடங்களில் தெரு விளக்குகள் எரியாமல் சாலைகள் இருளில் மூழ்கியுள்ளதாக பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்த புகார்களின் உண்மை நிலையை நேரில் அறிந்து தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், “காரில் சென்றால் பல விஷயங்கள் சரியாக தெரியாது; மக்களின் குறைகளை நேரடியாக உணர வேண்டும்” என்ற எண்ணத்துடன் மாநகராட்சி மேயர் ஜெகன், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் மாநகரம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து, மக்கள் உறங்கும் நள்ளிரவு வேளையில், தெருத்தெருவாக மாநகரம் முழுவதும் சுமார் இரண்டு மணி நேரம் அவர் சுற்றிப் பார்த்தார். எந்தெந்த பகுதிகளில் தெரு விளக்குகள் எரியவில்லை, எந்த சாலைகள் முழுமையாக இருளில் உள்ளன, சாலைகளின் தற்போதைய நிலை எப்படி உள்ளது, பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்ன, எதிர்காலத்தில் சாலை விரிவாக்கம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதனை அவர் நேரில் பார்வையிட்டு குறிப்பெடுத்தார்.
இந்த ஆய்வின் அடிப்படையில், மாநகரப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் செயல்படாமல் இருந்த மின்விளக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றை உடனடியாக பொருத்தவும், பழுது நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகள், மணல் தீட்டுகள் உள்ளிட்ட சுகாதாரக் குறைபாடுகளையும் மேயர் நேரில் ஆய்வு செய்து, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிய பொறுப்பை உணர்ந்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேருவின் ஆலோசனையின்படி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் முன்னெடுப்பில், மாநகர வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக மேயர் ஜெகன் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
மக்களின் நலனுக்காக இரவு நேரத்திலும் தனிப்பட்ட பாதுகாப்பு வாகனமின்றி இருசக்கர வாகனத்தில் மாநகரம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டதை பார்த்த பொதுமக்கள் வியப்பும் பாராட்டும் தெரிவித்தனர். இந்த ஆய்வு பயணத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, மேயர் ஜெகனின் நேரடி கள ஆய்வு நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளது.