தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் ஆளுமைகளை நேரில் சந்தித்து மக்களிடையே பேசுபொருளாகும் வகையில் பிரத்தியேக பேட்டிகளை வெளியிட்டு வரும் பிகின் வுட்ஸ் சேனல், இந்த முறை தூத்துக்குடி மாவட்ட திமுக அமைச்சரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் அவர்களை சந்தித்தது.


ஆங்கர் சக்தி நடத்திய இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அரசியல், மக்கள் பணி, தனிப்பட்ட அனுபவங்கள், தோல்விகளிலிருந்து கற்ற பாடங்கள் என பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இந்த பேட்டி வெளிச்சம் போட்டுள்ளது.


பேட்டியின் தொடக்கமே வித்தியாசமாக அமைந்தது. “மேம்… உங்கள் வீட்டில் நுழைந்தவுடன் வாசலில் க்யூஆர் கோடு இருந்ததை பார்த்தேன். இதுபோல் நான் எங்கும் பார்த்ததில்லை” என்ற கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் சிரித்தபடி அளித்த பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


“நான் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்பதில் எப்போதும் ஆர்வம் கொண்டவள். பலர் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகளை சொல்வார்கள், அவற்றை படிப்படியாக நிவர்த்தி செய்து வருகிறேன். சில நேரங்களில் வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது என்னை சந்திக்க என் வீட்டிற்கு வரும் மக்கள், அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து வாட்ஸ் அப்பில் தங்கள் குறைகளை அனுப்பலாம். அதையும் கவனித்து தீர்வு காண்கிறேன். காலத்திற்கு ஏற்றபடி நாம் மாற வேண்டும்” எனத் தெரிவித்தார்.


தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தை நினைவுகூர்ந்த அமைச்சர், “1996ஆம் ஆண்டில் தான் என் அரசியல் பயணம் தொடங்கியது. பெண்களுக்கு இடஒதுக்கீடு இருந்த காலகட்டம். இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிட தயங்கினர். அப்போது என் தந்தை, என் கணவர், மாமியார் அனைவரும் என்னிடம் பேசித் துணிந்து அரசியலுக்குள் வரச் செய்தார்கள்” என்றார்.


மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகள் அதிக அளவில் காலை உணவு அருந்துவது குறித்து எழுந்த கேள்விக்கு, “காலை நேர அவசரம், பெற்றோர்களின் வேலைச் சூழல், சூடான உணவை விரும்பும் குழந்தைகள் – இவை எல்லாம் சேர்ந்து பல குழந்தைகள் வீட்டில் காலை உணவை தவிர்க்கும் நிலை இருந்தது. அதனால் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு குழந்தைகளின் உடல் நலத்தையும் கல்வித் திறனையும் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. காலை உணவு இல்லாததால் குழந்தைகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைவலி போன்ற பிரச்சினைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாகக் கவனித்து தான் இந்த திட்டத்தை கொண்டு வந்தார்” என விளக்கினார்.


மேலும், “தமிழ்நாடு முழுவதும் தற்போது சுமார் 20 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தின் பயனை அனுபவித்து வருகின்றனர். சமூக நலத் துறையின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது எனக்கு பெரும் மகிழ்ச்சி. முதல்வர் அவர்களே ‘பல திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், இந்த காலை உணவு திட்டம் எனக்கு தனிப்பட்ட மனநிறைவை தருகிறது’ என்று கூறியுள்ளார்” என பெருமையுடன் கூறினார்.


தந்தையின் மறைவுக்குப் பிறகு தனக்கு வழங்கப்பட்ட மாவட்ட செயலாளர் பொறுப்பு குறித்து பேசுகையில், “அந்த பொறுப்பை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, முன்பைவிட கடுமையாக உழைத்தேன். சேர்மனாக இருந்த காலத்தில் ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததில்லை. என் துணை சேர்மன் கூட ‘அக்கா, ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்; அந்த நாள் நான் சேர்மனாக இருப்பேன்’ என்று வேடிக்கையாகக் கேட்பார்” என்று சிரிப்புடன் நினைவுகூர்ந்தார்.


30 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் பயணத்தில் வெற்றியும் தோல்வியும் தன்னை பல வகையில் செதுக்கியுள்ளதாக கூறிய அமைச்சர், “எம்பி தேர்தலிலும், ஒரு முறை சட்டமன்றத் தேர்தலிலும் ஏற்பட்ட தோல்விகள் எனக்கு பெரிய பாடங்களை கற்றுக் கொடுத்தன. அந்த தோல்விகளுக்குப் பிறகு மக்களோடு மக்களாக சென்று நேரடி பணி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்றார்.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து பேசும்போது, “அப்போது நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். நூறு நாட்களுக்கு மேலாக மக்கள் போராடினர். நிர்வாக சீர்கேடுகளால் பல அப்பாவி மக்கள் உயிரிழந்தது என் மனதில் ஆறாத வலியாக உள்ளது” என உருக்கமாக தெரிவித்தார்.


இறுதியாக அரசியல் எதிர்காலம் குறித்து பேசுகையில், “2026ஆம் ஆண்டு தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என உறுதியுடன் கூறினார்.


வாசலில் க்யூஆர் கோடு வைத்த அமைச்சரின் சிந்தனை முதல், விடுமுறை இல்லாத மக்கள் பணி வரை, கீதா ஜீவனின் இந்த பேட்டி அரசியலிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.