தூத்துக்குடி அருள்மிகு அன்னை ஸ்ரீ பாகம் பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் வளாகத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மண்டல பூஜை நிறைவு விழா இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. இதனை முன்னிட்டு அருள்மிகு ஐயப்பனுக்கு விக்னேஷ்வர பூஜை, வருண கும்ப பூஜை, வேதிகார் அர்ச்சனை, 108 சங்கு பூஜை, மகா கணபதி ஹோமம், ஸ்ரீ தர்ம சாஸ்தா மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாரணை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா அபிஷேகம் மிகுந்த பக்திப் பூர்வமாக நடத்தப்பட்டது.
அபிஷேகத்திற்குப் பின் அருள்மிகு ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தீபாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய அம்சமாக கோவில் வளாகத்தில் 2000 பேருக்கு மெகா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்றனர்.
அருள்மிகு ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி பஜனை, அலங்கார தீபாரணை நடைபெற்றது. பின்னர் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜைகள் அனைத்தையும் பிரதான பட்டர் கண்ணன் தலைமையில் பட்டர்கள் சிறப்பாக நடத்தினர்.
இந்த விழாவில் சிவன் கோவில் ஐயப்பன் குருசாமி ஆறுமுக நயினார், அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சரவணன், தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஜீவா பாண்டியன், விக்னேஷ் பாண்டியன், சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் முன்னாள் அறங்காவலர் தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார், அமைச்சரின் நேர்முக உதவியாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் ஆன்மிக மணம் கமழ, “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற பக்தி முழக்கத்தால் தூத்துக்குடி நகரமே பக்தியில் திளைத்தது.