தமிழகத்தின் விடுதலை வரலாற்றில் தன்னலமற்ற வீரத்திற்கும் அடங்கா துணிச்சலுக்கும் அடையாளமாக விளங்கும் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன், இன்று பிறந்த நாளில் நினைவுகூரப்படுகிறார்.


இன்றைய ஒட்டப்பிடாரம் அருகே உள்ள வீரபாண்டியபுரம் எனும் ஊரில் ஆட்சி செய்த ஜெகவீரபாண்டியனின் மறைவுக்குப் பின்னர் அரசகட்டிலேறியவர் கட்டபொம்மன். மக்களால் “ஆதி கட்டபொம்மன்” என அழைக்கப்பட்ட இவர், பாளையக்காரர் மரபின் முதன்மை அரசராகக் கருதப்படுகிறார்.‌இந்த மரபில் பிறந்த திக்குவிசய கட்டபொம்மன் – ஆறுமுகத்தம்மாள் தம்பதியருக்கு, 1760 ஜனவரி 3-ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவரே வீரபாண்டிய கட்டபொம்மன். நாயக்கர் மரபில் ஆட்சி தொடர்ந்ததால், அவர் “பொம்மு நாயக்கர்” என்றும் மக்களால் அழைக்கப்பட்டார்.


1790 பிப்ரவரி 2-ஆம் தேதி 47-வது பாளையக்காரராக பொறுப்பேற்ற வீரபாண்டிய கட்டபொம்மன், சுமார் 9 ஆண்டுகள் 8 மாதங்கள் 14 நாட்கள் ஆட்சி செய்தார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். சகோதரர்கள் ஊமைத்துரை, துரைச்சிங்கம்; சகோதரிகள் ஈசுவர வடிவு, துரைக்கண்ணு ஆகியோர் இவருடன் இருந்தனர்.


1793-ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி கப்பம் கோரியதை வீரத்துடன் எதிர்த்தார். 1797–1798 காலகட்டத்தில் நடந்த முதல் போரில் ஆங்கிலேய அதிகாரி ஆலன் துரையை தோற்கடித்து விரட்டியடித்தார்.


பின்னர் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜாக்சன், கட்டபொம்மனை அவமதிக்கும் நோக்கில் பல இடங்களுக்கு அழைத்து அலைக்கழித்தார். 1798 செப்டம்பர் 10-ஆம் தேதி இராமநாதபுரத்தில் கைது செய்ய முயன்றதை முறியடித்து, கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக்கு திரும்பினார்.


1799 செப்டம்பர் 5-ஆம் தேதி ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை முற்றுகையிட்டார். கடும் போருக்குப் பிறகு செப்டம்பர் 9-ஆம் தேதி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1-ஆம் தேதி புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் மூலம் கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 16-ஆம் தேதி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.


ஆனால், கட்டபொம்மனின் தியாகத்துடன் பாஞ்சாலங்குறிச்சியின் போராட்டம் முடிவடையவில்லை. 1801 பிப்ரவரி 2-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஊமைத்துரை விடுவிக்கப்பட்டு மீண்டும் கோட்டைக்கு புத்துயிர் கிடைத்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் பெரும்படையுடன் தாக்கி 1801 மே 24-ஆம் தேதி கோட்டையை கைப்பற்றினர். ஊமைத்துரையும் துரைச்சிங்கமும் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை தரைமட்டமாக்கப்பட்டு, அந்தப் பெயரே வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டது.


அடிமைத்தனத்துக்கு அடங்க மறுத்த முதல் சுதந்திரச் சுடர்களில் ஒருவரான வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழ்மண்ணின் வீர வரலாற்றில் என்றும் வாழும் மாவீரர்.