தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 957 நியாயவிலைக் கடைகள் மூலம் இந்தப் பரிசுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகராட்சி 50வது வார்டு அமுதாநகர் (SR நகர்) ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி திமுக கவுன்சிலர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.3,000 ரொக்கத் தொகை மற்றும் வேஷ்டி–சேலைகள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ரேசன் கடை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை ஆலந்தூர் பட்ரோடு நியாயவிலைக் கடையில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்வு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.