தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்க உதவியை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு வழங்கினார்.


தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.3000 ரொக்கத் தொகை, வேஷ்டி, சேலை, பச்சரிசி, சீனி, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, போல்பேட்டை பகுதியில் உள்ள டிஎம்சி காலனி நியாய விலை கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எப்போதும் துணையாக நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி பகுதி இருந்த நிலையும், தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் அனைவரும் பார்க்க வேண்டும் என்றார். ஒரு காலத்தில் குடிநீர் எப்போது வரும் என காத்திருந்த நிலை மாறி, இன்று முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், விரைவில் மாநகராட்சி முழுவதும் 24 மணி நேர குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


மேலும் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஆகையால் வரும் 2026ஆம் ஆண்டு தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், அவைத் தலைவர் அற்புதராஜ், வட்டப் பிரதிநிதி அருணகிரி, 20வது வார்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், வசந்தகுமார், ஆனந்தகுமார், சிவபாலாஜி, ராஜ்குமார், பெரியசாமி, தங்காராஜ், ஜெயபாண்டி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.