தமிழக முழுவதும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்க உதவி திட்டம் சிறப்பாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்க உதவியை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்து 47 ஆயிரத்து 1 குடும்ப அட்டைதாரர்களுக்கு, சுமார் 168 கோடி ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன என்றும், தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களும் இந்த திட்டத்தின் பயனை பெறுகின்றனர் என்றும் தெரிவித்தார். பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இந்த உதவிகளை பெற்றுச் செல்வதாகவும் அவர் கூறினார்.
மேலும், தமிழகத்தில் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மடிக்கணினிகள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடிய அதிநவீன வசதிகளுடன் வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையும் என்றும் அமைச்சர் விளக்கினார். கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் மழை மும்மாரியாக பெய்து வருவதும், அதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவதையும் சுட்டிக்காட்டினார். திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலன் முதன்மையாகக் கருதப்பட்டு, மக்கள் நேரடியாக பல்வேறு திட்டங்களின் பயனை அனுபவித்து வருவதாகவும், மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சமூகநலத்துறையில் ஊழல் நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது குறித்து பதிலளித்த அமைச்சர், எந்தத் துறையிலும் ஊழல் நடைபெறவில்லை என்றும், வெளிப்படையான நிர்வாகமே தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது என்றும் கூறினார். தேர்தலை முன்னிட்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது எதிர்க்கட்சிகளின் வழக்கமான அரசியல் என்றும், தமிழக மக்கள் இதனை நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும் அமைச்சர் விமர்சித்தார்.
மேலும், “தமிழகம் வளர்ச்சியடைந்துவிட்டது” என்ற காரணத்தை முன்வைத்து, மத்திய அரசு மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி மற்றும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதிகளை வழங்காமல், தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது என்றும் அமைச்சர் கீதாஜீவன் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி டூவிபுரம் மற்றும் சண்முகபுரம் நியாயவிலைக் கடைகளில், அரிசி, சர்க்கரை, முழு கரும்பு, விலையில்லா வேஷ்டி–சேலை ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்க உதவி வழங்கும் பொங்கல் பரிசு திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசின் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தமிழக முதல்வர் மக்கள் நலனை முன்னிறுத்தி இத்தகைய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் என்றும், மக்கள் அனைவரும் முதல்வருக்கு ஆதரவாக மீண்டும் மக்கள் பணியாற்ற துணை நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிசந்திரன், தாசில்தார் திருமணிஸ்டாலின், மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, கூட்டுறவு பதிவாளர் அந்தோணிபட்டுராஜ், இணைப்பதிவாளர் காந்திநாதன், துணைப்பதிவாளர் கலையரசி, திமுக மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் அதிஷ்டமணி, பேபி ஏஞ்சலின், சரவணக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.