இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையத் தேவர், மருது சகோதரர்கள் ஆகியோருக்கு போரின் போது தேவையான ஆயுதங்களை தனது கப்பல் மூலம் சென்றடைய உதவியவரும், முத்துகுளித்துறையின் 16வது மாமன்னருமான பாண்டியபதி தேர்மாறனின் 273வது ஆண்டு ஜெயந்தி விழா தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, லசால் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பாண்டியபதி தேர்மாறன் நினைவிடத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பனிமய மாதா திருத்தளத்திற்கு தங்கத் தேர் வழங்கியவர் என்ற பெருமையும் பாண்டியபதி தேர்மாறனுக்கு உண்டு.

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், பாண்டியபதி தேர்மாறன் ஜெயந்தி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த சமுதாய மக்களுக்கு தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். தூத்துக்குடி நகரத் தந்தை ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தின் நினைவாக மணி மண்டபம் அமைத்து அரசு விழாவாக கொண்டாடி வருவதாகவும், தோ்மாறனின் படத்தை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து தியாகிகளை கௌரவித்து வருவதாகவும் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த வரிசையில் பாண்டியபதி தேர்மாறனுக்கும் அரசு சார்பில் விழா நடத்துவதற்கான முன்னெடுப்பை முதலமைச்சரிடம் எடுத்துரைத்து, அதற்கான பணிகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து திமுக அரசுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா, வட்டச் செயலாளர் டென்சிங், வட்டப் பிரதிநிதி பாஸ்கர், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.