இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையத் தேவர், மருது சகோதரர்களுக்கு போரின் போது தேவையான ஆயுதங்களை தனது கப்பல் மூலம் கொண்டு சென்ற உதவியவரும், முத்துகுளித்துறையின் 16வது மாமன்னருமான பாண்டியபதி தேர்மாறனின் 273வது ஆண்டு ஜெயந்தி விழா நேற்று தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, லசால் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பாண்டியபதி தேர்மாறன் நினைவிடத்தில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் பேசுகையில், பாண்டியபதி தேர்மாறன் ஜெயந்தி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த சமுதாய மக்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்தார். தூத்துக்குடி நகர தந்தை ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து, அவருக்கு மணிமண்டபம் கட்ட சட்டமன்றத்தில் அறிவித்த பெருமை கடந்தகால அ.தி.மு.க. அரசுக்கே உரியது எனக் குறிப்பிட்டார்.

மேலும், 2026ஆம் ஆண்டு மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பாண்டியபதி தேர்மாறனின் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவித்து, அவருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்குப் பின் தி.மு.க. அரசு ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தின் மணிமண்டபத்தை நகரின் மையப் பகுதியில் அமைக்காமல், சுடுகாடு உள்ள பகுதியில் அமைத்ததாகவும், இதற்கு மீனவ மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறினார். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் புதிதாக மணிமண்டபம் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சுதாகர், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி மற்றும் விழா ஏற்பாட்டாளர் இன்னாசி உள்பட பலர் கலந்து கொண்டு பாண்டியபதி தேர்மாறனுக்கு அஞ்சலி செலுத்தினர்.