கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ம் தேதியான இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கூடத்திற்கு மாணவ, மாணவிகள் குழந்தைகள் உற்சாகமாக வந்தனர். முதல் நாள் என்பதால் மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே புத்தகங்கள் மற்றும் விலையில்லா சீருடைகள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி டூவிபுரம் 11 வது தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விலையில்லா இணை சீருடைகள் , புத்தகங்கள், மற்றும் கல்வி உபகரணங்களை மாணவ, மாணவிகளுக்கு அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், ஆட்சியர் இளம் பகவத் முன்னிலையில் தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சரை பள்ளி குழந்தைகள் ரோஸ் பூ வழங்கி வரவேற்றனர்.

பின்னர் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சீருடைகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் மோகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா, துணை தலைமை ஆசிரியர் பத்மா, மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவர் அணி அமைப்பாளர் அருண்குமார், 30 வது வார்டு கவுன்சிலர் அதிஷ்ட மணி, வட்ட செயலாளர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதிகள் கார்த்திகேயன், சுப்பிரமணியன், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், உட்பட கழக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.