அரசுத்துறை சேவை திட்டங்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி 2 ம் கேட் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை தொடங்கி வைத்து முகாம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். பொதுமக்கள் அளித்த சில மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகளை முகாம் நடைபெறக்கூடிய இடத்திலேயே பொதுமக்களிடம் அமைச்சர் வழங்கினார்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரகப்பகுதிகளில் 15 துறைகளில் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. மாநில முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3768 முகாம்களு,ம் ஊரக பகுதிகளில் 6232 முகாம்களும் என மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கும் இந்த முகாமில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தகுதியுள்ள மற்றும் விடுபட்ட பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த முகாமில் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டல தலைவர் அன்னலெட்சுமி உட்பட மாநகராட்சி அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
