உலக மக்கள்தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11 ம் தேதியான இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய மக்கள்தொகை பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக மக்கள்தொகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம், பாலின சமத்துவம், வறுமை, தாய்வழி சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பல்வேறு மக்கள்தொகை பிரச்சினைகள் குறித்து மக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதையே உலக மக்கள்தொகை தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கலை கல்லூரியில் இன்று (11.07.2025) காலை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அனைவரும் உலக மக்கள்தொகை குறித்து விழிப்புணர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பேரணியில் திரளான கலை கல்லூரி பெண்கள் கலந்து கொண்டு உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மக்கள்தொகை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

நிகழ்ச்சியில் துணை இயக்குநர் ஊரக பணிகள் மற்றும் குடும்ப நலம் பொன் ரவி, மருத்துவர் துணை இயக்குநர் சுகாதார பணிகள் பிரியதர்ஷினி, அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார்,
தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் வித்யா, துணை இயக்குநர் காச நோய் சுந்தரலிங்கம், துணை இயக்குநர் தொழுநோய் யமுனா, நகர் நல அலுவலர் சரோஜா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், சகோதரி முனைவர் ஜெஸி பர்னார்ந்து, புள்ளியியல் உதவியாளர் மாவட்ட குடும்ப நலச் செயலகம் பேச்சு முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.