பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மண்டல் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள பாஜக மாவட்டத் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் பேசிய அவர், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்த போது சந்தித்த அனுபவங்களை பகிர்ந்தார். “283 கிளைகள் இருந்த நிலையில், ஆரம்பத்தில் கூட்டத்திற்கு வெறும் 13 கிளைத் தலைவர்கள் மட்டுமே வந்தனர். இதை மாற்றுவதற்காக ஒவ்வொரு கிளையிலும் நேரடியாக சென்று பொதுமக்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தேன். அதன் விளைவாக ஒரே மாதத்தில் 165 செயல்திறன் கொண்ட கிளைத் தலைவர்கள் உருவாகினர்” என்றார்.
மேலும், “ஒவ்வொரு கிளையிலும் உள்ள குறை, நிறைகளை கண்டறிந்து அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்னால் அதன் பலன் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும். மாநில தலைவர் யார், எம்எல்ஏ யார் என்பதைக் குறித்து கவலைப்பட தேவையில்லை. உங்கள் கிளையில் மக்களுக்காக நீங்கள் உண்மையாக செயல்பட்டால், அதன் பிரதிபலிப்பு நிச்சயம் கிடைக்கும்” என நிர்வாகிகளை அவர் ஊக்குவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வடக்கு மண்டல் தலைவர் சுதா, மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், வடக்கு மண்டல் பிரபாரி சரவணன், ஜெயகிருஷ்ணன், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், OBC அணி மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜ், OBC மாவட்ட செயலாளர் குரு, வடக்கு மண்டல் பொதுச் செயலாளர்கள் சங்கர் கணேஷ், அன்புராஜ் உள்ளிட்ட பல்வேறு பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.