தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள ராஜ பிள்ளை சந்து பகுதியில், சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் சாலை உடைத்து கைவிடப்பட்டதுடன், பாதாள சாக்கடை உடைந்து இருப்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த சாலையின் மோசமான நிலை காரணமாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் நோயாளிகள் தினசரி வாழ்க்கையில் பெரும் அவதியை அனுபவித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சாலை சீரமைப்பு தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்தும், குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த அலட்சியத்தை கண்டித்து, ராஜ பிள்ளை சந்து பகுதியில் ஆய்வு செய்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்ததாக பிஜேபி முன்னாள் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று காலை திடீரென அந்த இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மூன்று நாட்களுக்குள் புதிய சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முக சுந்தரம், “இரண்டு ஆண்டுகளாக மக்கள் அவதிப்பட்டபோது மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பு அறிவித்ததும் திடீரென ஆய்வு நடத்தப்படுகிறது. மூன்று நாட்களில் சாலை அமைப்பதாக கூறுவது எவ்வளவு நடைமுறையில் சாத்தியம்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “இந்த வார்டு கவுன்சிலரை சந்தித்த போது, ‘நீங்கள் பாஜகவுக்கு தான் ஓட்டு போட்டீர்கள், திமுகவுக்கு ஓட்டு போட்டீர்களா?’ என்று கேட்கிறார். கவுன்சிலர் என்பது எல்லா மக்களுக்கும் பொதுவானவர். அரசியல் அடிப்படையில் அடிப்படை வசதிகள் மறுக்கப்படக் கூடாது,” என அவர் கடுமையாக விமர்சித்தார்.
ராஜ பிள்ளை சந்து சாலையை அமைக்காமல் அலட்சியம் காட்டிய தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், உடனடியாக நிரந்தர சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் மற்றும் பிஜேபி நிர்வாகிகள்
“நடவடிக்கை எடு… நடவடிக்கை எடு…” என்று மாநகராட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேயர் ஆய்வின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதி உண்மையில் நிறைவேற்றப்படுமா, அல்லது பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட அவசர நடவடிக்கையா என்பதே தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.