தூத்துக்குடி 2-கேட் அருகிலுள்ள தெப்பக்குளம் பகுதியில், தூத்துக்குடி மாநகராட்சி 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டிய மேம்படுத்தப்பட்ட பூங்கா, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுவதற்கும் முன்பே சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூங்கா சுற்றுச் சுவர் பகுதி மணல் சரிவால் மூன்று அடி பள்ளத்தில் இறங்கி பல இடங்களில் உடைந்துள்ளது. இதனால் தெப்பக்குளத்தின் பக்கவாட்டு சுவரும் சேதமடைந்துள்ளது.

இந்த நிலைமையை நேரில் ஆய்வு செய்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், இது திட்ட பிழையா? தொழில்நுட்ப பிழையா? கண்காணிப்பு பிழையா? என்று கேள்வி எழுப்பினார்.

சித்ராங்கதன் எழுப்பிய முக்கிய கேள்விகள்

இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பு கட்டாயமான சாயில் டெஸ்ட் (Soil Test) நடைபெற்றதா?

மண்ணின் தாங்கும் திறன் (BC Value) பரிசோதிக்கப்பட்டதா?

தாங்கும் திறன் குறைந்த மண்ணில் ஏன் இவ்வளவு பளுவை ஏற்றினர்?

நீர்நிலையைச் சுற்றி சுவர் அமைக்கும் போது பின்பற்ற வேண்டிய பொறியியல் நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டனவா?

சித்ராங்கதன், “இது சுவர் சரிவு அல்ல; திட்டத்தை நிறைவேற்றிய விதம் முழுவதும் கேள்விக்குறியாகிறது,” எனக் குறிப்பிட்டார்.

மாநகராட்சிக்கான சித்ராங்கதனின் நான்கு கோரிக்கைகள்

1. சரிந்துள்ள மண்ணை முழுவதும் அகற்ற வேண்டும்.

2. மண்ணை பலப்படுத்த Geotextile / Geogrid பதிக்க வேண்டும்.

3. புதிய BC மதிப்பின் அடிப்படையில் Footing, Wall Thickness, Reinforcement மாற்றி அமைக்க வேண்டும்.

4. இதற்குப் பிறகே நடைபாதை மற்றும் சுவர் மீண்டும் தரமாக அமைக்கப்பட வேண்டும்.

இந்த ஆய்வில் முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, சமூக ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் காளி ராஜா, அரசு தொடர்பு பிரிவு தலைவர் சின்னத்தம்பி பாண்டியன், ஊடகப் பிரிவு தலைவர் ஜெயக்குமார், வர்த்தக பிரிவு தலைவர் செந்தில், ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் வன்னியராஜ், ஓபிசி செயலாளர் குருமூர்த்தி, இளைஞரணி தலைவர் சக்திவேல், ஆன்மீக பிரிவு துணைத் தலைவர் உஷா தேவி, மருத்துவ பிரிவு தலைவர் பாலாஜி, சிறுபான்மை பிரிவு செயலாளர் பிடிலிஸ்ட் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திட்டத்திற்கு 75 லட்சம் செலவாகிய நிலையில், ஒரு மாதத்தில் சரிந்து விழுந்த இந்த சம்பவம், தூத்துக்குடி மக்களிடையே கடும் கேள்விகளை எழுப்பி வருகிறது.