தூத்துக்குடி நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு தெய்வீக தென்றல் ரஜினிகாந்த் நற்பணிமன்றம் சார்பில் சண்முகபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஜெயபால் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தையல் மெஷின் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பேசுகையில் அவர், “திரைப்படத் துறையில் 50 ஆண்டு காலம் நிறைவு செய்த ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ரசிகர் மன்றங்களாக ஆர்ப்பாட்டம் செய்வதற்குப் பதிலாக, அவரது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது ரஜினிக்கு பெருமை சேர்க்கும் செயல்.

நடிப்புத் திறமை, பணிவு, ஆன்மீக ஈடுபாடு ஆகியவற்றால் இன்று வரை சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார். ஆன்மீகப் பயணங்களிலும் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் தனித்துவமாக நடந்து செல்லும் குணம் அனைவருக்கும் முன்மாதிரி.

இந்த நற்பணிமன்றம் தொடர்ந்து பொதுமக்களுக்கு நன்மை செய்யும் செயல்களில் ஈடுபட வேண்டும். 75வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த விழாவை சிறப்பாக நடத்திய அனைவரையும் பாராட்டுகிறேன்,” என்று கூறினார். முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடினார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், வட்ட செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ் மகாராஜா, கவுன்சிலர் பாப்பாத்தி, முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ஸூர்யா, வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், ஜெபக்குமார் ரவி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், ரஜினி மன்ற நிர்வாகி விஜயானந்த், மணி அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.