தூத்துக்குடி டிசம்பர் 10 உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பாக மனித உரிமைகள் கருத்தரங்கம் நேற்று தூத்துக்குடியில் நடைபெற்றது. மக்கள் நல இயக்க நிறுவனர் துரையரசன் அவர்கள் நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தினார். ஒருங்கிணைப்பாளர் சாமு காந்தி மற்றும் எபநேசர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். தொழில் சங்கங்களின் செயல்பாடு குறித்து தோழர் மின்னல் அம்ஜத் பேசினார். மனித உரிமை மீறல்கள் குறித்து தோழர் தாளமுத்து நகர் செல்வா விளக்கமளித்தார். தொழிற்சாலைகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து வழக்கறிஞர் மைக்கேல் விரிவாக பேசினார்.

திராவிட கழக மாவட்ட செயலாளர் காசி மனித உரிமை முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தூத்துக்குடி அனல் மின் நிலையங்கள் மற்றும் மேக்சி பவர் நிறுவனம் மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை குறித்து தோழர் மாரி செல்வம் பேசினார்.

ஸ்டெர்லைட் ஆலை நில மீட்பு இயக்க பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மணி அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சமச்சீரான இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

நிகழ்ச்சியில் குளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி, தோழர் சகாயம், மேலும் மேலமருதூர் கிராமத்திலிருந்து பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் கிராமத்தின் குடிநீர் தேவைகள், கண்மாய் பராமரிப்பு மற்றும் மேக்சி பவர் நிறுவனம் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறித்து கருத்து தெரிவித்தனர்.

நன்றியுரை தூத்துக்குடி வணிகர் சங்க பொறுப்பாளர் செல்வராஜ் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் நல இயக்க பொறுப்பாளர்கள் முத்து மாடசாமி, அழகு தங்கம், சின்ராஜ், ஜெகநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நிறைவுற்றது.

கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்

1. மேல மருதூர் கிராம கண்மாய் மடகு பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் மின்சார பவர் பிளான்ட் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

2. நெல்லையில் அறப்போர் இயக்கம் நடத்திய கல் கோரி கருத்தரங்கில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

3. ஸ்டெர்லைட் ஆலைக்காக கையகப்படுத்திய 242 ஏக்கர் நிலத்தை மக்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும். அல்லது ஏக்கருக்கு ₹20 லட்சம் சமச்சீர் இழப்பீடு வழங்க வேண்டும்.

4. தூத்துக்குடி மதுரா கோட்ஸ் ஆலையை அரசு ஏற்று நடத்த வேண்டும். மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்; அந்த நிலத்தை தனியார் அபகரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

5. ஆதவா பவுண்டேஷன் நிறுவனம் மோசடி செய்ததாக கூறப்படும் பணத்தை ஆசிரியர்களுக்கு அரசு திருப்பி வழங்க வேண்டும்; அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

6. ஓட்டப்பிடாரம் ஒன்றியம் சந்திரி கொல்லம் பரம்பு கிராமத்தில் செயல்படும் கேகேஎம் கல் கோரியை அப்புறப்படுத்த வேண்டும்.

7. குளத்தூர் – வீரபாண்டியபுரம் சாலைகள் கல் கோரியால் சேதமடைந்துள்ளதால், புதிய சாலை அமைக்கப்பட வேண்டும்.

இந்த 7 தீர்மானங்களும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பப்படும் என ஒருங்கிணைப்பாளர் சாமு காந்தி தெரிவித்தார்.