தூத்துக்குடி செயிண்ட் மேரிஸ் கல்லூரி (தன்னாட்சி) கணித முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் “BRAINIACS 2025” என்ற தலைப்பில் பள்ளிகளுக்கிடையேயான வினாடி வினா போட்டி அக்டோபர் 8, 2025 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

காலை 9.00 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 14 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். கல்லூரியின் செயலாளரும் கணிதத் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான அருட்சகோதரி முனைவர் எஸ். குழந்தை தெரெஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த போட்டி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னாண்டோ அவர்கள் வாழ்த்துரையாற்றி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எழிலரசி, சுயநிதி பிரிவுத் துறை இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலையில் போட்டி துவக்கவிழா நடைபெற்றது.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்ட இவ்வினாடி வினா, கணிதம் மற்றும் தர்க்கரீதியான சிந்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு மாணவர்கள் கொண்ட குழுக்கள், கலந்து கொண்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் அவர்களின் பெயரால் அழைக்கப்படும் திரு. வாஞ்சி கோபாலகிருஷ்ணன் அவர்கள் வினாடி வினாவை சுவாரஸ்யமாகவும் அறிவார்ந்த வகையிலும் நடத்தினார்.

போட்டித் தொடரில் சிவந்தி ஆதித்தனார் பள்ளி முதல் இடத்தையும், கார்பரேஷன் பள்ளி இரண்டாம் இடத்தையும், அழகர் பப்ளிக் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

மூத்த பழைய மாணவியுமான செல்வி துர்கா (கீதா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை) அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கல்லூரி கீதம் ஒலித்தது மூலம் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த கணிதத்துறை பேராசிரியர்கள் முனைவர் புனிதா தாரணி (அறிவியல் புல முதல்வர் மற்றும் இணைப் பேராசிரியர்), முனைவர் அருள் ஜெஸ்டி, முனைவர் பிரிசில்லா பசிபிகா, முனைவர் ரீனா, முனைவர் ஜெனிட் அஜிதா, முனைவர் அன்பரசி ரொட்ரிகோ (சுயநிதி பிரிவு கணிதத் துறை ஒருங்கிணைப்பாளர்), முனைவர் ஆஸ்பின் சித்ரா, முனைவர் சுஜிதா ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்தனர்.

கணிதம், சிந்தனை, புதுமை — இதன் கலவையாக “BRAINIACS 2025” மாணவர்களுக்கு நினைவாக அமைந்தது.