மக்களின் நலனை முன்னிட்டு தமிழக அரசின் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், சிறப்பு மருத்துவ முகாம் நாளை (அக்டோபர் 11, சனிக்கிழமை) சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

இந்த முகாம் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மக்கள் நலனுக்காக வடிவமைக்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த சிறப்பு மருத்துவ முகாம், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். சாயர்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில் அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,” என அவர் தெரிவித்துள்ளார்.

இம்முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகளிர் & குழந்தை நலம், நரம்பியல், தோல் சிகிச்சை, கண் & பல் பரிசோதனை உள்ளிட்ட மொத்தம் 17 வகையான சிறப்பு மருத்துவப் பிரிவுகள் செயல்படவுள்ளன.

மேலும், இசிஜி, எக்கோ, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பலவிதமான மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளன.

“இம்முகாம் மூலம் பொதுமக்கள் தங்களின் உடல் நலனை பரிசோதித்து தேவையான சிகிச்சைகளைப் பெறலாம். அனைவரும் இம்முகாமில் தவறாமல் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.