பணி நிரந்தரம், பணி மதிப்பீடு அடிப்படையில் ஊதிய உயர்வு, பணியாளர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதி வழங்கல், பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்கள் நலச்சங்க செயலாளர் செல்வசுந்தரி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், நகர்ப்புற பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும், மகளிர் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும், மகளிர் திட்டத்தை தனித்துறையாக உருவாக்கி அரசின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வர ஆணை பிறப்பிக்க வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணிவாய்ப்பு வழங்க வேண்டும், பணியாளர்களுக்கான ஊதியத்தை மாவட்ட அலுவலகம் மூலம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த போராட்டத்தில் ஏராளமான ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.