தூத்துக்குடி, ஜனவரி 09 பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்துப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (09.01.2026) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பணிபுதுப்பித்தல் முறையை கைவிட்டு, பணிபாதுகாப்பு மற்றும் நிரந்தர பணிநியமனம் வழங்க வேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் முதன்மை கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
மேலும், உதவித்திட்ட அலுவலர், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், சமுதாய அமைப்பாளர், மாவட்ட கணினி உதவியாளர், மேலாண்மை தகவல் அமைப்பு பகுப்பாய்வாளர் உள்ளிட்ட பல்வேறு நிலை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு மற்றும் பயணப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பணியாளர்களின் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வருங்கால வைப்பு நிதி (E-PF) பிடித்தம், பொது மற்றும் மருத்துவக் காப்பீடு, பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு, ஈட்டிய விடுப்பு மற்றும் ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேபோல்,
பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணிவாய்ப்பு
சமுதாய அமைப்பில் பணியாற்றும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் மதிப்பூதியமாக மாதம் ரூ.10,000/-
9 வகையான கணக்குகளை பராமரிக்கும் புத்தக பராமரிப்பாளர்களுக்கும் அரசு திட்ட நிதியிலிருந்து ரூ.10,000/- மதிப்பூதியம்
ஊதியத் தொகையை மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் மூலம் நேரடியாக பணியாளர்களின் வங்கி கணக்கிற்கு வழங்குதல்
மகளிர் திட்டத்தை தனித்துறையாக உருவாக்கி, அரசின் நேரடி கண்காணிப்பில் (துறை அமைச்சர்) கொண்டு வர ஆணை பிறப்பித்தல்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சமையலர்களை காலமுறை ஊதியத்திற்குள் கொண்டுவருதல்
பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு பணி வரையறை செய்து ஊதிய உயர்வு
நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்திற்கு தனி அலுவலகம் மற்றும் கணினி வசதி
உள்ளிட்ட மொத்தம் 14 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அன்புச் செல்வம் (அரசு ஊழியர் சங்க தணிக்கையாளர்) தலைமை வகித்தார். முத்து மாரி (வட்டார இயக்க மேலாளர்) முன்னிலை வகித்தார். சங்கர பாண்டியன் (வட்டார இயக்க மேலாளர்) வரவேற்புரை ஆற்றினார். உமைய பார்வதி (நகர்ப்புற சமுதாய அமைப்பாளர்) உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் கலந்து கொண்டு, தங்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினர்.