தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி திருவள்ளுவர் சீவகாருண்ய சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளலார் அறிவொளி மன்றத்தின் முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.


இந்த விழா காலை வேளையில் இயற்கை உணவு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு உரைகளை வழங்கினர்.


வழக்கறிஞர் வீர பிரபாகரன் நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வு உரையாற்றி, பொதுமக்கள் தங்களின் உரிமைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். போட்டித் தேர்வு பயிற்சியாளரான தோழர் கனிஷ்டா பாலின சமத்துவம் குறித்து உரையாற்றி, சமத்துவ சமுதாயம் உருவாக இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.


குமிழ்முனை சைமன் ‘புத்தகம் பேசுது’ என்ற தலைப்பில் வாசிப்பு பழக்கத்தின் அவசியம் குறித்து உரையாற்றி, புத்தக வாசிப்பு மனிதனை முழுமைப்படுத்தும் என எடுத்துரைத்தார். முனைவர் சங்கர் சகா (தலைக்குழு, தூத்துக்குடி) சமூக வலைதளங்களில் சிக்கிக்கொள்ளும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குறித்து எச்சரிக்கை அளித்து, பொறுப்பான இணைய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


தொடர்ந்து உமா கண்ணன் டோரா (சிறுதானிய உணவகம், திருவில்லிபுத்தூர்) இயற்கை வாழ்வியல் மற்றும் சிறுதானிய உணவின் ஆரோக்கிய பயன்கள் குறித்து விளக்கமாக பேசினார். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஜெயக்குமார், திருவள்ளுவர் சீவகாருண்ய சங்க செயலாளர், சிறப்பாக செய்திருந்தார். மேலும் தூத்துக்குடி செல்வின் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.