தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. நகரத்தின் போக்குவரத்து அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு போதுமான வெளிச்சம் கிடைக்குமாறு முக்கிய சாலைகளில் உயர் மின் கோபுரங்கள் அமைத்து ஹைமாக்ஸ் லைட்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒரே நாளில் ஆறு இடங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஹைமாக்ஸ் லைட்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

இதில் எட்டையபுரம் ரோடு ஜங்ஷன், ஸ்டேட் பேங்க் காலனி ரவுண்டானா, இன்னாச்சியார்புரம் ஜங்ஷன் உள்ளிட்ட இடங்களில் புதிய ஹைமாக்ஸ் லைட்கள் நிறுவப்பட்டு இரவு நேரங்களில் பிரகாசமாக ஒளிர்ந்து வருகின்றன.

புதியதாக நிறுவப்பட்ட ஹைமாக்ஸ் லைட்களை மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு, அவற்றின் செயல்திறன் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் அடுத்த கட்டமாக குரூஸ் பெர்னாந்து சிலை, சப் கலெக்டர் அலுவலகம் முன்பு, இந்திரா காந்தி சிலை முன்பு, ரோச் பூங்கா உள்ளிட்ட ஆறு முக்கிய இடங்களில் புதியதாக உயர் மின் கோபுரம் அமைத்து ஹைமாக்ஸ் லைட் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்.

இந்த ஆய்வில் சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், போல் பேட்டை பகுதி திமுக பிரமுகர் பிரபாகர், மேயரின் நேர்முக உதவியாளர் ஜேஸ்பர், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.