தூத்துக்குடி ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதிக்கு வாகைக்குளத்தில் இருந்து புதுக்கோட்டை, கூட்டாம்புளி மற்றும் பேய்குளம் பகுதி குளத்தின் வழியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக, மேற்படி வழித்தடத்தில் உயர் அழுத்த கம்பிகளில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, பல மணி நேரம் ஏற்பட்ட மின்தடைகளால்  அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புள்ளாகி வந்தனர். இந்நிலையை போக்கிட, புதுக்கோட்டை தேரி ரோடு, மற்றும் வாகை குளம் ஏர்போர்ட் ரோடு வழியாக மாற்றுத் தடத்தில் மின்பாதை அமைக்க வேண்டும் என்று சேர்வைக்காரன்மடம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவரும், தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக துணை செயலாளருமான ஏஞ்சலின் ஜெனிட்டா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இக்கோரிக்கையை திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி மூலமாக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து இப்பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகளில் சண்முகையா எம்எல்ஏ பங்கேற்கும் போதெல்லாம், அவரிடம் இக்கோரிக்கை குறித்து வலியுறுத்தப்பட்டது. இதனை அடுத்து, சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நடவடிக்கையால், மின்வாரிய அதிகாரிகள் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர். தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு, மின்சார பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், டெண்டர் எடுத்தவர்கள் பணியை செய்யாமல் கிடப்பில் போடப்பட்டனர்.
          
இந்நிலையில், கடந்த ஜுலை 15 ம் தேதி சேர்வைக்காரன்மடத்தில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சண்முகையா எம்எல்ஏ வந்த போது, அவரிடம் ஏஞ்சலின் ஜெனிட்டா மற்றும் இளைஞர்கள், ஊர் பெரியவர்கள் கிடப்பில் உள்ள மேற்படி பணியை செய்து தரவேண்டும் என்றும், சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பார்மில் அநேக புதிய இணைப்புகள் சேர்க்கப்பட்டதால், அதன் மின் பளுவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
          
உடனே, சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து இரண்டு நாட்களில் மாற்றுவழி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அப்பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்து உள்ளது. சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பளுவை குறைக்க பேய்குளம் மற்றும் தங்கம்மாள்புரம் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
           
சேர்வைக்காரன்மடம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவரின் முயற்சியாலும், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா எடுத்த நடவடிக்கையாலும், 30 ஆண்டு கால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களின் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிற்கு ஊர் மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.