தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டம், திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நகர் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் ஆதிதிராவிடர் பறையர் சமூக மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தை கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் வழங்கிய மனுவில், கருணாநிதி நகர் பகுதியில் தற்போது சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், பல தலைமுறைகளாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் இந்த மக்களுக்கு இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பலமுறை சம்பந்தப்பட்ட துறைகளில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிடர் பறையர் சமூக மக்கள் பெரும்பாலும் கல்வியறிவற்ற தினக்கூலி தொழிலாளர்களாக இருந்து வருவதால், தங்களது உரிமைகளை சட்டரீதியாகப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து போதிய அறிவு இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், அவர்களுக்கு வேறு எங்கும் அசையா சொத்துகள் இல்லாததால், தற்போது வசித்து வரும் குடியிருப்பே அவர்களின் ஒரே வாழ்வாதார ஆதாரமாக உள்ளது.
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கருணாநிதி நகர் மக்களின் நீண்ட கால கோரிக்கையை கருத்தில் கொண்டு, மனிதநேய அடிப்படையிலும் சமூக நீதியின் அடிப்படையிலும் உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்தியுள்ளது.