தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு கயத்தார், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், எட்டையாபுரம் ஆகிய தாலுக்காக்களில் மொத்தம் 865 காற்றாலைகள் சுமார் 1404.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்காக நிறுவப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 2023 செப்டம்பர் மாதத்தில் கூடுதலாக 800 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழர் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.


இந்த காற்றாலைகள் பெரும்பாலும் விவசாய நிலங்களில் நிறுவப்பட்டு வருவதால், காற்றின் இயல்பான ஈரப்பதம் குறைந்து விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுவதாக அந்தக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதன் காரணமாக விவசாய தொழில் மெல்ல மெல்ல அழிந்து வருவதுடன், விவசாயத்தை நம்பி வாழும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஒரு காற்றாலை நிறுவ ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்கள் கிரயம் செய்யப்படுவதால் மாவட்டத்தில் விவசாய நிலப்பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதாகவும், இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எனவே, தூத்துக்குடி மாவட்டத்திற்கு இவ்வளவு தீங்கு விளைவிக்கும் காற்றாலைகள் தேவையில்லை என வலியுறுத்திய தமிழர் முன்னேற்றக் கழகம், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து காற்றாலைகளையும் தடை செய்து, அவற்றை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.


இந்த மனு தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் ச. ராஜா பி.எஸ்.சி. சார்பில் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவின் போது தமிழர் முன்னேற்றக் கழகம் கட்சி நிர்வாகி உடன் இருந்தார்.