தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு மாவட்ட கைப்பந்து (Handball) சாம்பியன்ஷிப் போட்டி 2025–26 ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வல்லநாடு பகுதியில் அமைந்துள்ள சாரா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியை சாரா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும், சாரா ஜூவல்லரி உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமான மதிப்பிற்குரிய ஹாஜி எம்.கே.எம். முகமது நாசர் அவர்கள் விழாவாக தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும், மாணவர்கள் விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துரை வழங்கினார்.
இந்த போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவ–மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கத்தின் தலைவர் பொறியாளர் அப்துல் வதூத், B.E., அவர்கள் அன்புடன் வரவேற்றார். மேலும், மாவட்ட அளவில் நடைபெறும் இந்த போட்டிகள் எதிர்காலத்தில் மாநில மற்றும் தேசிய அளவிலான வீரர்களை உருவாக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடும் திறமையான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து அணியில் சேர்க்கப்பட உள்ளனர். இதனால், மாவட்டத்தின் விளையாட்டு வளர்ச்சிக்கு இந்த சாம்பியன்ஷிப் போட்டி ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
பள்ளி மாணவ–மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு போட்டிகளை உற்சாகமாகக் கண்டு ரசித்து வருகின்றனர்.