தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட உதயநிதி கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா தூத்துக்குடி மீளவிட்டான் என். பெரியசாமி திடலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர் வரவேற்புரையாற்றினார்.
கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் தொடர் போட்டிகள், லீக் முறையில் பகுதி, மண்டலம், மாநகர அளவுகளில் நடத்தப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்தது. இதில் வடக்கு மாவட்ட திமுகவைச் சேர்ந்த மொத்தம் 115 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் பரிசுத்தொகை, கோப்பைகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் டி-ஷர்ட்கள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், “உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு, இளைஞர்களை விளையாட்டின் வழியாக ஒருங்கிணைத்தது மிகப் பெரிய சாதனையாகும். போட்டியில் கலந்து கொண்டதே ஒரு பெரிய வெற்றியாகும்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று, இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக உயர்ந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் நம்பர் ஒன் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, கரும்புடன் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.3,000 வழங்கப்படும் அறிவிப்பு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும், விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வடக்கு மாவட்டத்தில் கபடி, கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்கள் என அனைவரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட உள்ளன.
முதலமைச்சரின் எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் வடக்கு மாவட்ட திமுக செயல்பட்டு வருகிறது. இளைஞர் அணியினர் 115 அணிகளை ஒருங்கிணைத்து இந்த கிரிக்கெட் தொடரை சிறப்பாக நடத்தி பெருமை சேர்த்துள்ளனர்” என பாராட்டினார்.
இந்த விழாவில் மாநில இளைஞர் துணை செயலாளர் இன்பாரகு, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மகளிர் அணி, மாணவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, வழக்கறிஞர் அணி, சிறுபான்மை அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மற்றும் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா பெரியசாமி நன்றியுரையாற்றினார்.