ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாளையங்கோட்டை – அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் ரூ.6.35 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இதன்படி, கி.மீ 16/910 முதல் 18/0 வரை இருவழிச்சாலையை கடின புருவங்களுடன் கூடிய அகலமான இருவழிச்சாலையாக மாற்ற ரூ.450 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கி.மீ 25/0 – 25/9 மற்றும் 27/8 – 30/0 வரை இருவழிச்சாலையின் ஓடுதளத்தை மேம்படுத்த ரூ.185 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன.


இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால், பொதுமக்களின் போக்குவரத்து வசதி மேம்படுவதோடு, வாகன விபத்துகள் குறையும் என்றும், கிராமப்புற வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் திலீப்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி செயலர் செல்வம், கிளை செயலாளர்கள் முத்துப்பாண்டி, ராஜா, கிராம நிர்வாக அலுவலர்கள் முருகன், ராஜன், ஒப்பந்தக்காரர் ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.