உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 13 வயதிற்குட்பட்ட தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி அதிரடியான வெற்றியைப் பதிவு செய்து கோப்பையை கைப்பற்றியது.

அக்டோபர் 4 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து 26 மாநில அணிகள் பங்கேற்றன. கடைசி கட்டமான இறுதிப் போட்டியில் தமிழகம், மகாராஷ்டிரா அணியுடன் மோதியது. துவக்கம் முதலே தன்னம்பிக்கையுடன் ஆடிய தமிழக அணி, 82–32 என்ற புள்ளிக்கணக்கில் எதிரணியை முறியடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.

வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை உத்தரகாண்ட் வனத்துறை அமைச்சர் சுபோத் உனியல் வழங்கினார். தமிழக அணியின் வெற்றிக்குக் காரணம் — தூத்துக்குடியின் பெருமை, ஆர். ரியோனா! அணியின் தலைவராக விளங்கிய இவர், அனைத்து ஆட்டங்களிலும் அசத்தலான ஆட்டம் காட்டி, “மிகவும் மதிப்புமிக்க வீராங்கனை (Most Valuable Player)” விருதையும் ரூ.50,000 பரிசுத் தொகையையும் பெற்றார்.

அணியில் ஜெயஸ்ரீ, பி.எஸ். ஸ்வேதா உள்ளிட்ட வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர். தூத்துக்குடியைச் சேர்ந்த வினோத் தலைமையில் அணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ரியோனாவின் சாதனைக்கு தூத்துக்குடி விளையாட்டு உலகம் பெருமிதம் கொள்கிறது. சமூக வலைதளங்களில் “நாட்டை கவர்ந்த நம் தூத்துக்குடி ரியோனா!” என பாராட்டுகள் மழை பெய்கின்றன.