தமிழகத்திலேயே தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு வகையில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என். நேரு  ஆலோசனையின்படி தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உத்தரவிற்கிணங்க மாநகரில் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் மாநகராட்சி அரங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் செப்டம்பர் மாதம் இறுதியில் மழைக்காலம் தொடங்கி விடும் தசரா விடுமுறை பத்து நாட்கள் நடைபெறும் ஆகையால் மாநகராட்சியில் பணிகளை எடுத்த ஒப்பந்தக்காரர்கள் பணிகளை விரைவாக நல்லமுறையில் முடிக்க வேண்டும். மக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி மாநகராட்சியில் பணிகளை எடுத்த ஒப்பந்தக்காரர்கள் உடனடியாக பணிகளை நல்லமுறையில் முடிக்க வேண்டும். அதற்கான காலக்கெடுகளை ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்களும் பின்பற்ற வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.  அப்போது ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்களும் தங்களுக்கு எவ்வளவு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது எவ்வளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை ஒப்பந்தக்காரர்கள் கூறினார்கள்.

பின்னர் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை எந்த தேதிக்குள் முடிப்பீர்கள் என்று உறுதியாக இந்த இடத்தில் கூற வேண்டும் என்று ஒப்பந்தக்காரர்களிடம் கேட்டுக் கொண்டார். அப்போது ஒவ்வொரு ஒப்பந்ததாரர்களும் தங்கள் பணிகள் முடியும் தேதிகளை தெரிவித்தனர். மேலும், குளம் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் மழைக்காலத்துக்கு முன்பு பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தக்காரரிடம் கூறியதற்கு, அதற்கு ஒப்பந்ததாரர் தற்போது அந்த குளத்தில் தண்ணீர் உள்ளது என்று கூறினார்கள்.

உடனடியாக அதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி பணிகளை நீங்கள் துவக்க வேண்டும் இப்போது நீங்கள் பணிகளை ஆரம்பித்தால் தான் மழை துவங்குவதற்கு முன்பு பணிகள் முடியும் என்று ஒப்பந்ததாரரிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் கூறினார். மாநகராட்சியில் மொத்தம் 900 பணிகளில் 300 பணிகள் முடிவடைந்து உள்ளது. 600 பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் சாலைகள் மழை நீர் கால்வாய் பூங்காக்கள் 4 குளம் மற்றும் பல கட்டிடங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் எல்லாம் மழை காலத்துக்கு முன்பு முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர்களை கேட்டுக் கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன் துணைப் பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீர் அகமது, உதவி ஆணையர் கல்யாண சுந்தரம், இளநிலை பொறியாளர்கள் செல்வம், பாண்டி, லெனின், அமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.