சில தினங்களாக சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட பெயர் " வேடன் " கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள்தான் சமீபநாட்களாக ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்டவற்றில் அதிகம் இடம்பெறுபவை,
வேடன் என்ற மேடைப் பெயரால் பிரபலமாக அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, கேரளாவின் திருச்சூரில் பிறந்தவர். 2020-ஆம் ஆண்டு கொரோனா பரவல் காலகட்டத்தில் "வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்" என்ற தனது முதல் இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டு புகழ் பெற்றார். இந்தப் பாடல் தீயாய் பரவி அவரை பிரபலமாக்கியது. சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் இடம்பெற்ற வரிகள் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2021-ம் ஆண்டு, ஜோஜு ஜார்ஜ், குஞ்சாகோ போபன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘நாயாட்டு’ என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ‘நரபலி’ என்ற பாடலை பாடியிருந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான ‘நோ வே அவுட்’ படத்தின் ‘மரணத்தின் நிறம்’ என்ற பாடலையும் பாடியிருந்தார்.
தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘குத்தந்திரம்’ என்ற பாடலுக்காக இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுடன் கைகோத்தார். கேன்ஸ் விழாவில் விருது பெற்று உலக அளவில் கவனம் ஈர்த்த 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தில் 'கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்' பாடலையும் எழுதிப் பாடியிருந்தார்.
டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘நரிவேட்டை’ படத்தில் ‘வாடா வேடா’ என்ற வேடன் எழுதி பாடியுள்ளார். இதில் பழங்குடியினரின் போராட்டம், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை முன்னிறுத்தி எழுதப்பட்ட வரிகள் பரவலாக கவனம் பெற்று வருகிறது. இன்னும் பல்வேறு திரைப்படங்களில் பணிபுரிந்து வரும் வேடன், இன்னொரு பக்கம் அதே சுயாதீன இசை ஆல்பங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அதேசமயம் சமூக வலைதளங்களிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேடனுக்கு ஆதரவு குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பலரும் பாடலின் வரிகளையும், பாடல் துணுக்குகளையும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாகவும், ஸ்டோரிகளாகவும் இடம்பெறச் செய்து வேடனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம், மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பக்கங்களில் மலையாள ராப் பாடகர் வேடன் பாடல் வரிகளுக்கு ரீல்ஸ் பதிவு செய்து தனது ஆதரவை தெரிவித்தார். வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியனின் ராப் பாடகர் வேடன் பாடல் வரிகளுக்கு ரீல்ஸ் பதிவு தற்போது சமூக வலைதளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
