தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்கப்படாமல் சங்கரன்கோவிலில் உள்ள கோசாலைக்கு அனுப்பப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம், மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்,
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மழைக்காலத்தில் 16, 17, 2 ஆகிய 3 வார்டுகளைத் தவிர, மற்ற பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பல்வேறு வழித்தடங்களில் கழிவுநீர் பம்பிங் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முத்துநகர் கடற்கரை பூங்கா, ரோச் பூங்கா, ராஜாஜி பூங்கா, எம்ஜிஆர் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பொழுதுபோக்கு மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேயர் தெரிவித்தார்.
டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்கா உள்ளே உள்ள நீர்தேக்கத் தொட்டி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், அது சீரமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். மேலும், முத்துநகர் கடற்கரையில் தனியார் ஒப்பந்தத்தின் கீழ் படகு சவாரி வசதி விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
147 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெப்பக்குளம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சீரமைக்கப்பட்டு வருவதாகவும், அமோனியா காரணமாக மீன்கள் அகற்றப்பட்ட போது ஏற்பட்ட விரிசல்கள் தற்போது பழமை மாறாமல் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் மேயர் விளக்கினார். பிப்ரவரி 1-ம் தேதி தெப்ப திருவிழா நடைபெற உள்ள நிலையில், பணிகள் முடிந்தால் நான்கு புறமும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பணிகள் முடியாவிட்டால் கீழ்புறம் மற்றும் மேற்புறம் என இரு பகுதிகளில் மட்டும் பார்வைக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார்.
மாநகரில் அமைக்கப்படும் அனைத்து கழிவுநீர் கால்வாய்களும் சுகாதாரத்தை பேணும் வகையில் மூடி அமைக்கப்பட்டு வருவதாகவும், டிஜிட்டல் விளம்பர பலகைகள் சாலைகளில் வைக்கப்படுவது பெரும் சவாலாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து மாநகரில் முழுமையான தடை விதிப்பதா அல்லது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அனுமதி வழங்குவதா என்பது குறித்து ஆணையருடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என குறிப்பிட்ட மேயர், அபராதம் விதித்தாலும் மீண்டும் மாடுகள் சாலைகளில் விடப்படுவதால், இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜனவரி 1 முதல் பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும் எச்சரித்தார்.
மேலும், மாநகரில் 1,880 புதிய மின் விளக்குகள் விரைவில் பொருத்தப்பட உள்ளதாகவும், 3,000 புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட சாலைகளின் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
இதனையடுத்து, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் – 2023ன் கீழ், அரசாணை எண் 480 படி சொத்து வரி பெயர் மாற்றக் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களுக்கான 3 ஆண்டு புதுப்பித்தல் கட்டணம் உள்ளிட்ட திருத்தங்கள் தொடர்பான விவரங்கள் மாமன்றத்தின் பார்வைக்கும் பதிவிற்கும் சமர்ப்பிக்கப்பட்டு, 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாமன்ற உறுப்பினர்கள் வக்கீல் மந்திரமூர்த்தி, சரவணக்குமார், கீதாமுருகேசன், வீரபாகு, கந்தசாமி, மும்தாஜ், முத்துமாரி, அதிஷ்டமணி உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் நிறைவு செய்யப்பட்ட பணிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிய கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
பதிலுரையில் மேயர் ஜெகன் பெரியசாமி, விவிடி சிக்னல் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், அந்த பகுதியில் உள்ள காலியிடங்களை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு குறைந்த கட்டணத்தில் நிகழ்ச்சிகள் நடத்த முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தற்போது மாநகரில் 53 பூங்காக்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், விரைவில் முதியோர்களுக்கான பூங்காக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் கூறினார். மொத்தம் 206 பூங்காக்கள் அடங்கிய மாநகராட்சியாக உருவாகும் நிலை இருப்பதாகவும், தேசிய நெடுஞ்சாலையின் 26 கிலோ மீட்டர் தூரப் பகுதியிலும் மாநகராட்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கூட்டத்தின் முடிவில், “ஒருவாரம் பொறுத்துக் கொள்ளுங்கள்; அதன் பின் பணிகள் வேகமாக தொடங்கி முழுமையாக நிறைவு பெறும்” என தெரிவித்த மேயர், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இந்த ஆண்டின் கடைசி மாமன்றக் கூட்டத்தை நிறைவு செய்தார்.
இந்த கூட்டத்தில் இணை ஆணையர் சரவணக்குமார், மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் காந்திமதி, உதவி ஆணையர் வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர், மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் கீதாமுருகேசன், அதிஷ்டமணி, சரவணக்குமார், ரெங்கசாமி, பொன்னப்பன், ஜான்சிராணி, சந்திரபோஸ், முத்துவேல், மும்தாஜ், ராமுஅம்மாள், தனலட்சுமி, முத்துமாரி, விஜயகுமார், கனகராஜ், ஜாக்குலின் ஜெயா, ஆறுமுகம் வைதேகி, மெட்டில்டா, சுப்புலட்சுமி, பாப்பாத்தி, ரெக்ஸ்லின், வக்கீல் வீரபாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.