தூத்துக்குடி, மகாத்மா காந்தி பெயரில் செயல்பட்டு வந்த கிராமப்புற 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் இருந்து காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலை உறுதித் திட்டம், மகாத்மா காந்தியின் பெயரால் அடையாளம் பெற்றதாக இருந்தது. இந்த திட்டத்தில் இருந்து காந்தி பெயரை நீக்கியதோடு, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ஊதியத் தொகையில் 40 சதவீதத்தை மாநில அரசே வழங்க வேண்டும் என சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக அதிமுக செயல்படுவது கிராமப்புற மக்களுக்கு செய்த அநீதி எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைப்படி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மாப்பிள்ளையூரணி ஆசைதம்பி நகரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் ஜோசியர் முருகன், மாவட்ட தொ.அ. துணை அமைப்பாளர் அந்தோணி தனுஸ் பாலன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பிலோமின் ராஜ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தங்கமாரிமுத்து, ஒன்றிய துணை செயலாளர்கள் கணேசன், ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், வழக்கறிஞர் அணி சோனாராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்வட்ராஜ், அந்தோணி மிக்கேல், கண்ணன், ஆறுமுகம், அருள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சங்கரன், கிருஷ்ணன், பிச்சையா, முருகேசன், ஐயப்பன், தாமோதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சவுந்திரராஜ், கொம்பையா, மாடசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மண்டல துணைச் செயலாளர் அர்ஜீனன், மாவட்ட செயலாளர் கணேசன், ஓட்டப்பிடாரம் பொறுப்பாளர் ரஞ்சித் பாண்டியன், மனித நேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜாஹீர் உசேன், ம.நீ.ம கட்சியைச் சேர்ந்த சந்தனம், சேர்மத்துரை, சிபிஎம்எல் கட்சியைச் சேர்ந்த சிவராமன், முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


அத்துடன், அணி நிர்வாகிகள் ராஜேந்திரன், மதன், மகாராஜன், மகளிர் அணி நிர்வாகிகள் ஜெசிந்தா, சண்முகத்தாய், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சேவியர், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதி ராஜா, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வலுப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் மூலம், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.