தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளை தனிநபர்கள் ஆக்கிரமித்து விற்பனை செய்து வருவதாகக் கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத்தை பயனாளர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், இலுப்பையூரணி ஊராட்சியில் தமிழக அரசால் 118 பேருக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களை கோவில்பட்டி வட்டாட்சியர் அளவீடு செய்து கல் நாட்டிய பிறகும், சில தனிநபர்கள் அந்த இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து விற்பனை செய்து வருவதாக பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து தகவல் அறிந்து பட்டா பெற்ற பயனாளர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்றபோது, ஆக்கிரமிப்பாளர்கள் தங்களை மிரட்டி விரட்டியதாகவும், இதனால் தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைகளில் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே, தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளை மீட்டு, உரிய பயனாளிகளுக்கே வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இணைந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், அளவீடு செய்து கல் நாட்டப்பட்ட அரசு இலவச வீட்டு மனைகளில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலப்பட்டா பெற்ற பயனாளிகளுக்கு முறையாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இந்த மனு வழங்கும் நிகழ்ச்சியில் மூவேந்தர் மருத முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்பரசு, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் பொன்மாடசாமி, மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், நிலப்பட்டா பெற்ற பயனாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, தங்களுக்கு உரிய வீட்டு மனைகள் கிடைக்க வேண்டும் என ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்தனர்.