தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் உள்ள ராஜா பிள்ளை தெருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இதை கண்டித்து பாஜக முன்னாள் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் எஸ். சண்முகசுந்தரம் இன்று (9–1–2026) மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்க இருப்பதாக அறிவித்தார்.
இந்த பேட்டி அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரங்களுக்குள், இன்று அதிகாலை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சம்பந்தப்பட்ட தெருவில் திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலை சீரமைப்பு பணிகள் இரண்டு ஆண்டுகளாக ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.
தெருவாசிகள் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக நிர்வாகிகள் பலமுறை மனுக்கள், கோரிக்கைகள் வழங்கியும் மாநகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதையடுத்து, சாலை அமைக்காததை கண்டித்து பாஜக சார்பில் ஊடகப் பேட்டி மற்றும் கண்டன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட உடனேயே மேயர் திடீர் ஆய்வுக்கு வந்திருப்பது அரசியல் நோக்கத்துடன் கூடிய நடவடிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“மக்களின் மனுக்கள் வேலை செய்யாத நிலையில், பத்திரிகையாளர் மைக்கே தீர்வாகிறதா?” என்ற விமர்சனமும் அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடமும் வலுப்பெற்று வருகிறது. பாஜக சார்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் பேட்டி அறிவிப்பின் அழுத்தத்தாலேயே மேயரின் இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக பேசப்படுகிறது.